அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே,
 

நமஸ்காரம்,

சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் மத்திய அரசு அமைப்புகளின் கணினிகள் கண்காணிப்பு.
 
கணினிகள் பயன்படுத்துவதனை மத்திய அரசினை சார்ந்த 10 புலனாய்வு மற்றும் விசாரணை அமைப்புகள் கண்காணிக்கலாம் என்று கடந்த வாரம் மத்திய அரசு அறிவித்தது.மத்திய அரசினுடைய ஒவ்வொரு முயற்சியிலும் குறை கண்டு, குற்றம் சொல்லி, உள்நோக்கம் கற்பித்து மற்றும் கொச்சைப்படுத்துவதனை ஒருசில அரசியல் கட்சிகளும், வேறு சில தன்னார்வ அமைப்புகளும் வழக்கமாக கொண்டுள்ளனர்.இந்த விஷயத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் நிலைப்பாடுதான் ஏமாற்றத்தினையும், வருத்தத்தினையும் அளிக்கின்றது. ஏனென்றால் 2008ம் ஆண்டு மத்திய அரசில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியும், திமுகவும் இணைந்து கொண்டுவந்த சட்டம்தான் தொலைபேசி, அலைபேசி மற்றும் கணினி ஆகிய தொடர்புகளை கண்காணிக்கும் சட்டம். அவர்களது ஆட்சிக் காலத்தில் அவர்கள் இந்த சட்டத்தினை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான  தொலைபேசி மற்றும் அலைபேசி கணக்குகளையும், நூற்றுக்கும் மேற்பட்ட இ-மெயில் கணக்குகளையும் கண்காணித்து வந்துள்ளனர்.
 
நாம் இவ்விஷயத்தில் புரிந்து கொள்ள வேண்டிய சரியான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன :
 
2009ம் ஆண்டு ஐக்கிய முன்னணி கூட்டணி மத்திய அரசு கொண்டு வந்ததுதான் இந்த கண்காணிப்புச் சட்டம்.
 
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1885ல் கொண்டுவரப்பட்ட தந்திப்பொறி சட்டத்தின் கீழ், தபால், தந்தி, தொலைபேசிகளைக் கண்காணிக்கும் அதிகாரம், மத்திய - மாநில அரசுகளுக்கு இருந்தது. இந்த அதிகாரம் தனி மனித சுதந்திரத்துக்கு விரோதமானது என்று தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவின் மீது, 1996-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பொது நெருக்கடி காலத்திலும், மற்றும் பொது மக்கள் பாதுகாப்புக்காகவும், இந்த அதிகாரத்தை பயன்படுத்தலாம் என்று கூறியது. 1996ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய குறுகிய நோக்கம் கொண்ட தீர்ப்பு, 2001ல் அமெரிக்கா மீதும், பிறகு 2008ல் நம் நாட்டிலும் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த பிறகு, அறவே மாறியது. எனவே, நாட்டின் பன்முனைப் பாதுகாப்புக்காக ஐக்கிய முன்னணி கூட்டணி அரசு 2009ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் (Information Technology Act)  ஷரத்து 69ல் திருத்தம் கொண்டு வந்தது.
 
அந்த திருத்தம் நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை, உள்நாட்டு மற்றும் எல்லை பாதுகாப்பு, வெளிநாடுகளுடன் நட்பு, சட்டம் - ஒழுங்கு போன்ற அத்தியாவசிய நலனுக்காகவும், குற்றங்கள் புரிவதைத் தூண்டுவதைத் தடுக்கவும், குற்ற விசாரணைகள் செய்யவும், தொலைபேசிகள் மட்டுமல்லாமல், கணினிகள் உள்பட எல்லா விதமான தகவல் தொடர்புகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தை மத்திய - மாநில அரசுகளுக்கு வழங்கியது. இந்தச் சட்டத்தை ஐக்கிய முன்னணி அரசு கொண்டு வந்த சமயத்தில், அப்போது எதிர்க்கட்சியில் இருந்த பா.ஜ.க. நாட்டின் பாதுகாப்பை மனதில் வைத்து, அதை ஆதரித்தது என்பது கவனிக்கத்தக்கது.
 
இந்த சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதனைக் கண்டு தவறு செய்பவர்கள் தான் அஞ்ச வேண்டும். சட்டத்திற்கு புறம்பாக செயல்படுபவர்கள், வரி ஏய்ப்பு செய்கின்றவர்கள், வன்முறையில் ஈடுபடுகின்றவர்கள், தீவிரவாதிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு உளவு சொல்கின்றவர்கள் ஆகியோர் மட்டுமே இந்த சட்டத்தினைப் பற்றி கவலைப்பட வேண்டும். நமது நாட்டின் நேர்மையான குடிமகன்கள் மற்றும் இந்திய இறையாண்மையை மதிக்கின்ற எவரும் கவலைப்படத் தேவையில்லை.
 
நமது வாசகர்களில் பலருக்கு தெரிந்திருக்கலாம் அமெரிக்கா தமது பல்வேறு அமைப்புக்கள் மூலம் செயற்கை கோள் உதவியுடன் உலகம் முழுவதையும் கண்காணித்து வருகின்றது. நம்மைப் பொறுத்தவரை நாம் தொலைபேசி, அலைபேசி, கணினி ஆகியவைகளை அரசாங்கத்தின் குறிப்பிட்ட அமைப்புகள் அவ்வப்போது அரசின் முன் அனுமதி பெற்று கண்காணிப்பதனை ஆதரிக்கின்றோம்.
 
இந்த சட்டத்தின் நடைமுறைப்படுத்துதல் அரசியல் கட்சிகளையும், அவர்களது வியூகங்களையும் வேவு பார்ப்பதற்கு துஷ்பிரயோகம் செய்திடக் கூடாது என்பது நமது கருத்து ஆகும். இந்த ஒரு அரசியல் பரிமாணத்திற்காக மட்டுமே இந்தியாவினுடைய உள்நாட்டு பாதுகாப்பு, எல்லை பாதுகாப்பு மற்றும் இறையாண்மையினை பாதுகாக்கின்ற இந்த சட்டத்தினை எதிர்ப்பது சரியான அணுகுமுறை அல்ல.
 
இந்த தலைவர் மடல் எழுதுகின்ற இத்தருணத்தில் மத்திய அரசின் NIA  அமைப்பு கணினி கண்காணிப்பு செய்ததனால் பயங்கரவாதிகளுடைய சதித்திட்டத்தினை கண்டுபிடித்து முறியடித்துள்ளது என்பதனையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.
 
அரசியல் கட்சிகள், அவர்கள் அகில இந்திய கட்சிகளாயிருந்தாலும், மாநில கட்சிகளாக இருந்தாலும் நமது நாட்டினுடைய பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விஷயங்களில் கட்சி அரசியல் செய்திடாமல், குறுகிய அரசியல் இலாபங்களுக்காக செயல்படாமல் நமது நாட்டினை முன்னிறுத்தி தொலை நோக்கு அணுகுமுறையுடன் செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கம் கேட்டுக் கொள்கின்றது. 
 

 

நன்றி,

இங்ஙனம்

உங்கள் அன்பு சகோதரன்

என்.நாராயணன்

மாநிலத் தலைவர்

 

என் கேள்விக்கென்ன பதில்
பிரதமர் நரேந்திர மோடி அவர்களும், பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவர்களும் அரசியல் சாணக்கியத்தனம் நிறைந்தவர்கள் என்றும் அவர்களுடைய தேர்தல் வியூகங்கள் வெற்றிகரமாக அமையும் என்பது உண்மையா?
- எஸ்.ஆராவமுதன், ஸ்ரீரங்கம்
 
 
Read More ..
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS